கீசு கீசு என்றெங்கும் - TPV7
இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர குறிப்புகளையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************
திருப்பாவையின் ஏழாம் பாசுரம்:
பைரவி ராகம , மிச்ரசாபு தாளம்
பறவைகளின் கீசு, கீசு ஒலியும், தயிற்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
"கீசு கீசு என்று வலியன் குருவிகள் தங்களுக்குள் பேசும் இனிய ஒலி உன் காதுகளில் விழவில்லையா, பேதைப்பெண்ணே!
வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கல கலவென்று என்று ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடையும் சப்தத்தை நீ கேட்டிலையோ? கோபியர் கூட்டத்திற்குத் தலைவியே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளே! எழுந்து கதவைத் திறந்து, பாவை நோன்பை மேற்கொள்ள வருவாயாக!
பாசுர குறிப்புகள்:
இப்பாசுரத்தில் பலவகையான செவிக்கினிமையான ஓசைகள் சொல்லப்பட்டுள்ளன.
1. ஆனைச்சாத்தன் குருவிகள் கூவும் ஓசை
2. ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவெனும் ஒலி
3. அவர்கள் தயிர் கடையும் சப்தம்
4. நாராயண சங்கீர்த்தனம்
இவ்வளவு ஓசைகளுக்கும் நடுவில் எழுப்பப்படும் பாகவதை உறங்குவதால், அவளை "பேய்பெண்ணே" என்று ஆண்டாள் சொல்வது நியாயம் தானே!
குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை அழித்ததால் கேசவன் என்ற திருநாமம் கொண்ட மார்கழிக்கான மூர்த்தியைப் பாடியும், "நாயகப் பெண்பிள்ளாய், தேசமுடையாய்" என்று நயமாக பாராட்டி அழைத்தும் அந்த பாகவதையை எப்பாடு பட்டாவது எழுப்பி, பரமனடி பற்ற தங்களுடன் கூட்டிச் செல்ல அவளது தோழியர் விழைவது, கூட்டுச் சரணாகதி(ததீயரோடு சரண் புகுதல்)என்ற வைணவத்தின் உயரிய கோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.
ஆனைச்சாத்தன் என்பது பரமனைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம், அதாவது யானையைக் காத்தவன் என்றும் யானையை அழித்தவன் என்றும்! பரந்தாமன் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காத்து ரட்சித்தான், கம்சன் அனுப்பிய குவலயாபீடம் என்ற யானையை கண்ணன் அழித்தான்.
காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
"தேசமுடையாய்" என்பது தூங்கும் பெண்ணின் ஒளி வீசும் முகத்தை (தேஜஸ்) முன்னிறுத்திச் சொன்னது. அத்தகைய தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே உபாயம் என்று முழுமையாக உணர்ந்தவர்க்கே!) வாய்க்கும்! பூவுலகிலேயே தாஸ்ய ஞானம் வாய்க்கப் பெற்றவரில் அனுமன், பீஷ்மர், கோபியர் ஆகியோர் அடங்குவர்.
பாசுரச் சிறப்பு:
1. ஆறாம் பாசுரத்திலிருந்து (புள்ளும் சிலம்பின காண்) பதினாறாம் பாசுரம் (நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய) வரை உள்ள 11 பாசுரங்கள், (ஆண்டாள் தவிர்த்து மற்ற) பதினோரு ஆழ்வார்களை துயிலெழுப்பப் பாடப்பட்ட பாசுரங்கள் என்று வானமாமலை ஜீயர் உள்ளுரை கூறியிருக்கிறார். குறிப்பாக, இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது!
2. முதலில் 'பேய்ப்பெண்ணே' என்றும் பின் 'நாயகப் பெண்பிள்ளாய்' என்றும் மாறுபட அழைப்பது போலத் தோன்றினாலும், எப்படியாவது உறங்கபவளை எழச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலேயே சொல்லப்படுவதால், மாறுபாடு இல்லை! அதாவது, அடியவரோடு கூட்டாக இறை அனுபவத்தில் திளைத்தலை இப்பாசுரம் வலியுறுத்துகிறது.
3. "தேசமுடையாய்" என்றும் துயிலெழுப்பப்படும் பெண் விளிக்கப்படுவதால், அவள் பரம பாகவதை என்பதும் தெளிவாகிறது!
4. வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.
5. "ஆனைச் சாத்தன்" என்பது அடியவரின் (யானையின் வலிமைக்கு ஒப்பான) புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி, தன் வசம் சேர்த்துக் கொள்ளும் பரந்தாமனை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
6. "கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு" என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.
7. 'பேய்ப்பெண்' என்ற பதம், பகவத் அனுபவத்தில் மூழ்கி விட்டதால், பேதை போலத் தோன்றும் சிறந்த அடியாரைக் குறிக்கிறது.
8. 'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' --- 'வாச நறுங்குழல்' என்பது உபனிடதங்களையும் சாத்திரங்களையும் கற்றறிந்த தன்மையையும், 'ஆய்ச்சியர்' என்பது ஆச்சார்யர்களையும் குறிப்பில் உணர்த்துகிறது.
9. 'காசும் பிறப்பும்' என்ற ஆபரணங்கள் இங்கே வேதங்களை (அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதியை) குறிப்பில் உணர்த்துகின்றன.
10. "மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ" --- மிகுந்த தேடலுக்குப் பின் ஏற்பட்ட ஞானத்தின் பயனால் விளைந்த, "நாராயணனே பரதேவதா" என்ற தெளிதலை, ஆச்சார்யர்கள் உரக்கக் கூறுகின்றனர்!
11. "நாயகப் பெண்பிள்ளாய்" - பகவத் அனுபவ ஞானத்தினால், தலைமைப் பண்பைப் பெற்ற அடியார்கள்
12. நாராயணன் மூர்த்தி --- சிவனையும், பிரம்மனையும் படைத்தவன்!
13. கேசவன் --- மார்கழி மாதத்தின் அபிமான தேவதையாகப் போற்றப்படுபவன்
13. நீ கேட்டே கிடத்தியோ? - இவ்வாறு பரமன் பெருமை அறிந்தும், சரணாகதியை மேற்கொள்ளாமல் இருப்பது சரியோ ?
14. திறவேலோ ரெம்பாவாய் - பரமனைப் பற்றுவதற்கு பிரபத்தி உபாயத்தை கை கொள்ள வருவாயாக !
****************************************************
இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது என்று கூறுவதற்கான அழகான விளக்கம் கீழே:
ஆண்டாளின் "ஆனச்சாத்தன், காசும் பிறப்பும், பேய்ப்பெண்ணே, நாயகப்பெண்பிள்ளாய், தேசமுடையாய், கேட்டே கிடத்தியோ" ஆகிய சொற்பிரயோகங்களை கவனிக்க வேண்டும்.
முதலாவதாக, 'ஆனைச்சாத்தன்' என்பது மலையாளத்திலிருந்து வந்த சொல். குலசேகரப் பெருமான் மலை நாட்டில் அவதரித்தவர் என்று தொடர்பு படுத்திக் கொள்ளலாம். அது போலவே, 'காசும் பிறப்பும்' என்று ஆண்டாள் நகையைப் பற்றிப் பேசும்போது, குலசேகராழ்வார் வாழ்வில் நடந்த (மன்னனின் அமைச்சர்கள் கோயில் நகையை ஒளித்து வைத்து விட்டு, கோவிலில் பணிபுரிந்த வைணவர்கள் அதை திருடி விட்டதாக புகார் கூறி, பின் தங்கள் தவறை உணர்வதாக சொல்லப்படும்) நிகழ்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.
இரண்டாவதாக, குலசேகரப் பெருமானே (தனது பெருமாள் திருமொழியில்)தன்னை "பேயன்" என்று கூறிக் கொள்வதை நோக்குதல் அவசியம்!
பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்-
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே.* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே
மூன்றாவதாக, குலசேகராழ்வார் தன்னை "கொல்லிக்காவலன் கூடல் நாயகன்" என்று தனது கையெழுத்துப் பாசுரங்களில் கூறிக் கொள்வது வழக்கம். அதனாலேயே, கோதை நாச்சியார் அவரை, "நாயகப் பெண்பிள்ளாய்" என்று விளிக்கிறார், இப்பாசுரத்தில் !!! மேலும், ஒரு ஆரத்தின் நடுவண் இருக்கும் கல், 'நாயகக்' கல் என்றழைக்கப்படும். குரு பரம்பரை எனும் மாலையின் நடுநாயகமாக ஜொலிப்பவர் எம்பெருமானார் (எந்தை ராமானுச முனி).
அது போல, ஆழ்வார்கள் வரிசை எனும் மாலையில் நடுநாயகமாகத் திகழ்பவர் குலசேகரப் பெருமாள். எப்படி? மாலையின் ஒரு புறம், முதல் மூன்று ஆழ்வார்கள், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐவர், மறுபுறம் பெரியாழ்வார், ஆண்டாள்,தொண்டரடிப்பொடி, திருப்பாணர் மற்றும் திருக்கலியன் ஆகியோர்.
நான்காவதாக, பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தில், 'தேஜஸ்' என்பதை சத்திரியர்களின் முக்கியமான இயல்பாகக் கூறியிருக்கிறான். 'தேசமுடையாய்' (தேஜஸ் மருவி தேசம் ஆகியது)என்றழைக்கும்போது, அது சத்திரிய குல மன்னனான குலசேகரரைக் குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்வது மிக ஏற்புடையதே.
ஐந்தாவதாக, "கேட்டே கிடத்தியோ?" என்று ஆண்டாள் பாடும்போது, பாகவதர்களிடமிருந்து ராமாயண காவியத்தை திரும்பத் திரும்ப கேட்டு, ராம பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த குலசேகரப் பெருமானை இப்பாசுரம் துயிலெழுப்புவதாக கொள்வது சரியானதே.
என்றென்றும் அன்புடன்
பாலா
15 மறுமொழிகள்:
Arumaiyana-Thelivana-engalaipondravar-galum purindhu-kolum vannam ezhuthugindri-gal.
Thangal thirupani melum melum thodara Andal sameda Rangamannarai-vaendi(praying) vizhyum
sundaram
p.s: A great job as Desigan seems busy and urs seem to be lone effort in Margazhi..pl continue.
ஆண்டாள் ஒரு கிராமத்துப் பெண். பாருங்கள் மண் வாசனையை, பாசுரம் முழுக்க!
கீச் கீச் என்று பேசுவதை, கீசு கீசு என்றே ஆரம்பிக்கிறாள்!
ஆனைச்சாத்தன் பறவை = செம்போத்து ன்னு கிராமத்தில் சொல்லுவாங்க; குருவியிலேயே குட்டிக் குருவி!
அவை கலந்து பேசின பேச்சாம்!
அப்படி என்ன பேசிச்சுங்க?
நய விளக்கமாச் சொல்வார்கள்.
கீசு = க் ஏஷு? = யார் ஈசன்? என்று ஒரு பறவை கேட்கிறது.
கீசு = கிம் ஏஷு = அவன் தான் ஈசன்
என்று அதற்கு இன்னொரு பறவை பதில் சொல்கிறது!
இப்படித் தான் "கீசு கீசு" என்று கலந்து பேசினதாக பூர்வாசாரியர் விளக்கமும் மிக இனிமையாக இருக்கும்!
ஆனைச்சாத்தன்....என்றால் "வலியன்" என்று அழைக்கப் படும் "கரிச்சன் குருவி" என்று சுதா சேஷய்யன் போன ஞாயிறன்று டி வி யில் சொல்லிக் கொண்டிருந்தார்...இப்போது KRS "செம்போந்து" என சொல்கிறார் இரண்டும் ஒன்றேதானா ?
சங்கர்
இந்த ஆனைச்சாத்தன் குழப்பம் ரொம்ப நாளாப் பேசப்படுவது தான்!
சிலர் கருங்குருவி (வலியன்) என்றும் சொல்லுவார்கள்; சிலர் செம்போத்து என்றும் சொல்லுவார்கள்!
Seven Sisters என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு! சீனாவிலும் இருக்காம்! இந்தாங்க படம்!
http://www.lcsd.gov.hk/green/birds/en/bird_9.html
கரிக்குருவி காலையில் பறப்பதில்லை. மாலையில் மட்டுமே
பறக்கும் என்றும் சொல்வார்கள்.
கன்னல் என்னும் கருங்குருவி
ககன மழைக்காற்றாமல்
மின்னல் என்னும் புழுவெடுத்து
விளக்கேற்றும் கார்காலம்
ன்னு பாட்டும் இருக்கு!
மின்மினிப் பூச்சி காலையில் வராது. மாலையில் தான் வரும்! கருங்குருவி மின்மினிப் பூச்சியைப் பிடிச்சி விளக்கு ஏற்றுது என்று பாடல் சொல்லுது! அப்படிப் பார்த்தால் கருங்குருவி மாலை நேரப் பறவை!
ஆக, ஆண்டாள் சொல்வது கருங் குருவியா இருக்க வாய்ப்பில்லாமல் போகுது! மேலும் இது ஒரு சாம்பல் நிறப் பறவை! கருப்பு கிடையாது!
மேலும் "திருத்தாய் செம்போத்தே" என்று திருமங்கையும் இன்னொரு பாசுரத்தில் காலை நற்சகுணமாய் இந்தச் செம்போத்துப் பறவையைக் குறிப்பிடுகிறார்.
பேசின பேச்சரவம்-ன்னு சொல்வதால், இதன் ஒலி பேசுவது போல் இருக்கும், கூவுவது போல் இருக்காது! ரெண்டு பறவையில் எது கீச்கீச்-னு பேசும் என்பதைக் கேட்டவர்கள் சொல்லுங்கப்பா! :-)
சர்வேசன் கதை - இறுதி சுற்றில் வாக்களித்துவிட்டீர்கள??
என் பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்
//ஆனைச்சாத்தன் பறவை = செம்போத்து ன்னு கிராமத்தில் சொல்லுவாங்க; குருவியிலேயே குட்டிக் குருவி! //
உண்மையில் செம்போத்து என்பது கொஞ்சம் பெரிய பறவை. நல்ல வெயில் நேரத்தில் துரத்திக்கொண்டே ஓடினால் கொஞ்ச தூரத்திலேயேபறக்க முடியாமல் மயங்கிவிடும்.
அதன் பெயர் செண்பகப்பட்சி. இது மருவி செம்போத்து ஆனது. இது கீச் கீச்சென்று கத்தாது. பூத் பூத் என்ற் கத்தும். கிராமங்களில் மழை ஊத்து ஊத்து என்று சொல்கிறது என்று சொல்வார்கள்.
செம்போத்து எதிரில் வர அபசகுனமாகவே கருதுகிறார்கள்.
கரிக்குருவி கதையே வேறு
இன்னும் கொஞ்சம் விளக்க ஆசைதான் இதுவே பதிவு மாதிரி போகிறது.
நன்றி
கண்ணபிரான்,
மீள்வரவுக்கும், மேலதிக தகவலுக்கும் நன்றி.
வீ.எம்,
நச் கதையை வாசித்தேன். உங்களுக்கு வோட்டும் போட்டேன் :)
நந்து f/o நிலா,
செம்போத்து பற்றி ஆராய்ச்சியே செஞ்சிருக்கீங்க போலத் தெரியுது :)
அப்படியே கரிக்குருவி பத்தியும் கொஞ்சம் தகவல் கொடுத்தீங்கன்னா தன்யனாவேன் :) நன்றி.
எ.அ.பாலா
//Thangal thirupani melum melum thodara Andal sameda Rangamannarai-vaendi(praying) vizhyum
sundaram
//
Thank you Sir ...
Thanks Bala for your excellent post on Thivyaprabhandham. I am reading it now and some words are hard for me to understand. Just like the explanation or "urai" you have given for each song, I am wondering if there is a website that explains the meanings of all the 4000 songs or if there is a book that explains it. Please provide some pointers to me at ilangomey@yahoo.com. Your help is much appreciated.
Thanks,
Ilango.
test !
//இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது!//
எதை வைத்து சொல்லிகின்றீர்கள்
//கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு" என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.//
இன்னும் விளக்கினாள் நன்றாக இருக்கும் என்ன சம்பாஷணை
பாசுரச் சிறப்பாக சொன்ன விசயங்கள் எல்லாம் அருமை
மின்னல் said...
//இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது!//
எதை வைத்து சொல்லிகின்றீர்கள்
******************************
காரணம்:
ஆண்டாளின் "ஆனச்சாத்தன், காசும் பிறப்பும், பேய்ப்பெண்ணே, நாயகப்பெண்பிள்ளாய், தேசமுடையாய், கேட்டே கிடத்தியோ" ஆகிய சொற்பிரயோகங்களை கவனிக்க வேண்டும்.
முதலாவதாக, 'ஆனைச்சாத்தன்' என்பது மலையாளத்திலிருந்து வந்த சொல். குலசேகரப் பெருமான் மலை நாட்டில் அவதரித்தவர் என்று தொடர்பு படுத்திக் கொள்ளலாம். அது போலவே, 'காசும் பிறப்பும்' என்று ஆண்டாள் நகையைப் பற்றிப் பேசும்போது, குலசேகராழ்வார் வாழ்வில் நடந்த (மன்னனின் அமைச்சர்கள் கோயில் நகையை ஒளித்து வைத்து விட்டு, கோவிலில் பணிபுரிந்த வைணவர்கள் அதை திருடி விட்டதாக புகார் கூறி, பின் தங்கள் தவறை உணர்வதாக சொல்லப்படும்) நிகழ்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.
இரண்டாவதாக, குலசேகரப் பெருமானே (தனது பெருமாள் திருமொழியில்)தன்னை "பேயன்" என்று கூறிக் கொள்வதை நோக்குதல் அவசியம்!
பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்-
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே.* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே
மூன்றாவதாக, குலசேகராழ்வார் தன்னை "கொல்லிக்காவலன் கூடல் நாயகன்" என்று தனது கையெழுத்துப் பாசுரங்களில் கூறிக் கொள்வது வழக்கம். அதனாலேயே, கோதை நாச்சியார் அவரை, "நாயகப் பெண்பிள்ளாய்" என்று விளிக்கிறார், இப்பாசுரத்தில் !!! மேலும், ஒரு ஆரத்தின் நடுவண் இருக்கும் கல், 'நாயகக்' கல் என்றழைக்கப்படும். குரு பரம்பரை எனும் மாலையின் நடுநாயகமாக ஜொலிப்பவர் எம்பெருமானார் (எந்தை ராமானுச முனி).
அது போல, ஆழ்வார்கள் வரிசை எனும் மாலையில் நடுநாயகமாகத் திகழ்பவர் குலசேகரப் பெருமாள். எப்படி? மாலையின் ஒரு புறம், முதல் மூன்று ஆழ்வார்கள், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐவர், மறுபுறம் பெரியாழ்வார், ஆண்டாள்,தொண்டரடிப்பொடி, திருப்பாணர் மற்றும் திருக்கலியன் ஆகியோர்.
நான்காவதாக, பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தில், 'தேஜஸ்' என்பதை சத்திரியர்களின் முக்கியமான இயல்பாகக் கூறியிருக்கிறான். 'தேசமுடையாய்' (தேஜஸ் மருவி தேசம் ஆகியது)என்றழைக்கும்போது, அது சத்திரிய குல மன்னனான குலசேகரரைக் குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்வது மிக
ஏற்புடையதே.
ஐந்தாவதாக, "கேட்டே கிடத்தியோ?" என்று ஆண்டாள் பாடும்போது,
பாகவதர்களிடமிருந்து ராமாயண காவியத்தை திரும்பத் திரும்ப கேட்டு, ராம
பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த குலசேகரப் பெருமானை இப்பாசுரம்
துயிலெழுப்புவதாக கொள்வது சரியானதே.
இந்த விளக்கம் போதுமா, இன்னும் கொஞ்சம் தேவையா ? :)
**************************
//கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு" என்பது, பரமனுக்கும்,
திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.//
இன்னும் விளக்கினாள் நன்றாக இருக்கும் என்ன சம்பாஷணை
****************************
இதில் விளக்க பெரிதாக எதுவும் இல்லை. பொதுவாக, திருமகள் பெருமாளைக் காட்டிலும் கருணை மிக்கவள். அதனால், தாயார் பல சமயங்களில் அடியாரை
விரைவில் கடாட்சிக்க பெருமாளிடம் ரெகமண்டேஷன் செய்வது வழக்கம். அதாவது
அடியார்கள் குறித்த சம்பாஷணைகளே அவை :)
என்றென்றும் அன்புடன்
பாலா
//Thanks Bala for your excellent post on Thivyaprabhandham. I am reading it now and some words are hard for me to understand. Just like the explanation or "urai" you have given for each song, I am wondering if there is a website that explains the meanings of all the 4000 songs or if there is a book that explains it. Please provide some pointers to me at ilangomey@yahoo.com. Your help is much appreciated.
Thanks,
Ilango.
//
Thanks for your kind words, Ilango.
There is no website that explains the meaning of entire prabandham (all 4000 verses).
www.srivaishnavam.com has some meanings of one part called periya thirumozhi by thirumangai Azwar.
Republished this thiruppavai posting after adding more information and pictures
பிரமாதம். பாடல்களும் அவற்றின் ஆழ்ந்த விளக்கங்களும்... இது வரை இவற்றை பற்றி இவவளுவு படிக்கும் வைப்பு கிடைக்க வில்லை.நன்றி. - சுவாமிநாதன்
Post a Comment